சோலையம்மன் கோவில் தேரோட்டம்
சின்னசேலம் அருகே சோலையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சின்னசேலம்
சின்னசேலம் அருகே உள்ள நாககுப்பம் கிராமத்தில் சோலையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து முத்தாலம்மன், மகா மாரியம்மனுக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. மேலும் சுவாமிகளுக்கு தீர்த்த குடம் எடுத்தல், சக்தி அழைத்தல், சுவாமி வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தோ் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பிற்பகல் 3 மணியளவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தோில் சோலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி, அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் நாககுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.