திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல்லில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நாமக்கல் நகராட்சி பகுதியில் தமிழக அரசின் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்னும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பொதுமக்களிடையே திடக்கழிவுகள் மேலாண்மை திட்டம் மற்றும் 'என் குப்பை எனது பொறுப்பு' என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று திடக்கழிவுகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து வழங்குதல், பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருத்தல் மற்றும் ஒருமுறை மட்டும் உபயோகித்து தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாமக்கல் நகராட்சி பகுதிகளில் நடந்தது. இதையொட்டி 13, 17, 25 மற்றும் 29 ஆகிய நான்கு வார்டுகளில் முழுவதுமாக வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சின்னமுதலைப்பட்டியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, ஆணையாளர் சுதா, நகர்மன்ற துணை தலைவர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டு திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்தல் மற்றும் பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.