சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகளுக்கு தீர்வு


சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 62 வழக்குகளுக்கு தீர்வு
x

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், ரூ.2 கோடியே 90 லட்சம் பைசல் தொகை வழங்கப்பட்டு, 62 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

நாமக்கல்

சிறப்பு மக்கள் நீதிமன்றம்

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் கிருஷ்ணன், விஜய்கார்த்திக், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இதில் அறிவுசார் சொத்துரிமை, நுகர்வோர் வழக்குகள், கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள், சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், விபத்துகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்துவரி பிரச்சினை போன்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

62 வழக்குகளில் தீர்வு

ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பிள்ளாநல்லூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பிரவின்குமார் (வயது21). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் ஆசனூர் மேம்பாலம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த டாரஸ் லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரவின்குமார் இறந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தது.

இதேபோல் நாமக்கல் அருகே உள்ள சிங்கிலிப்பட்டியை சேர்ந்தவர் சூர்யா (22). கார் டிரைவர். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி கோவையில் இருந்து சேலம் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தார். குமாரபாளையம் வட்டமலை காளியம்மன் கோவில் அருகே வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த இரு வழக்குகளிலும் வக்கீல் என்.கே.பி.வடிவேல் வாதாடி வந்தார்.

நேற்று நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் இறந்த பிரவின்குமார் குடும்பத்திற்கு ரூ.30 லட்சமும், சூர்யா குடும்பத்திற்கு ரூ.15 லட்சத்து 34 ஆயிரமும் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முன்வந்தன. இதையடுத்து இருவழக்குகளிலும் சமரசம் ஏற்பட்டு, இழப்பீடு பெறுவதற்கான ஆணையை மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வழங்கினார்.

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 93 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 62 வழக்குகளில் ரூ.2 கோடியே 90 லட்சத்து 33 ஆயிரத்து 349 பைசல்தொகை செலுத்தி தீர்வு காணப்பட்டது.


Next Story