அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்? - எடப்பாடி பழனிசாமி பேட்டி


அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்?  - எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 18 Aug 2022 12:16 PM IST (Updated: 18 Aug 2022 12:48 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வை தன்வசப்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக இயக்கத்தை சிலர் தன் வசம் கொண்டு செல்ல முயற்சி செய்கின்றனர். அதனை தடுக்கும் போது தான் சில பிரச்னைகள் உருவாகின்றன. மறைந்த முன்னாள முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்க்குப் பின் இரண்டு அணியில் இருந்தவர்கள் 2017 ல் ஒன்றாக இணைந்தோம்.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதிமுகவில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம், செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே தீர்மானம் செல்லும், ஒப்புதல் பெறாததால் இரட்டை தலைமை பதவி காலாவதியாகிவிட்டது. ஒருங்கிணைப்பாளர்களை தொண்டர்கள் தேர்வு செய்யும் வகையில் விதி திருத்தப்பட்டது, ஆனால் அந்த விதிக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு கொடுப்பார், யாரை எதிர்த்து பதவி பெற்றரோ அவர்களை தான் அழைப்பார். தர்மயுத்தம் போனதே சிலரை எதிர்த்துதான் அவர்களைதான் அழைக்கிறார். அவருடைய மகன் எம்.பி ஆகவும், மற்றொருவர் மத்திய மந்திரியாகவும் ஆகவேண்டும், வேறு யாரைப்பற்றியும் கவலையில்லை.

கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே அதிமுகவினரின் விருப்பம். யார் ஒற்றை தலைமைக்கு வர வேண்டும் என கட்சியினர் எந்த கருத்தையும் கூறவில்லை. யார் ஒற்றைத் தலைமை எனக்கூறாத நிலையில் அதற்குள் பொதுக்குழு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை தொண்டர்களின் பிரதிநிதிகள். தொண்டர்கள் விருப்பத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தனர்.

நான் எப்பொழுதும் சொந்தக்காலில் நிற்க விரும்புபவன். கட்சிக்கு சோதனையான காலங்களிலும் உண்மையாக செயல்பட்டேன். எப்பொழுதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. கட்சியில் படிப்படியாக உயர்ந்தவன் நான். நான் இல்லை என்றாலும் கட்சிக்கு வேறு ஒரு தலைவர் வருவார். ஆனால் கட்சி விதிகளை மதிக்க வேண்டும்.

தொண்டர்கள் பலம் ஓபிஎஸ்-க்கு இருந்தால் அதை பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே... அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்? அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடியவர்களுடனா இணைவது? தொண்டர்களை காயப்படுத்திய ஓபிஎஸ் உடன் எப்படி ஒன்றிணைய முடியும்? என ஓபிஎஸ் அழைப்புக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

மேலும் ஒன்றிணைய அழைப்பு விடுத்த ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார்.


Next Story