குடும்ப தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து


குடும்ப தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து
x

பாணாவரம் அருகே குடும்ப தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

ராணிப்பேட்டை

பாணாவரத்தை அடுத்த நெரிஞ்சந்தாங்கல் கிராமம், பெரிய தெருவில் வசிப்பவர் சுந்தரம் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 31). இவருக்கும் பழையபாளையம் கிராமத்தை சேர்ந்த காசி என்பவரின் மகள் யுவஸ்ரீ (23) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு யுவஸ்ரீ தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் மணிகண்டன் தனது தந்தை சுந்தரம், அண்ணன் தனசேகர் ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு யுவஸ்ரீ வீட்டிற்கு சென்று தன்னுடன் மனைவியை அனுப்புமாறு அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்போது யுவஸ்ரீயின் குடும்பத்தினருக்கும், மணிகண்டன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் கற்களால் தாக்கிகொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யுவஸ்ரீயின் பெரியப்பா அண்ணாதுரை என்பவரை கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கற்கள் வீசியதில் படுகாயமடைந்த சுந்தரம், கத்தியால் குத்தப்பட்ட அண்ணாதுரை ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து இருத்தரப்பினர் அளித்த புகாரின் பேரில் பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகர், ஜீவராஜ் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story