முதியவரை அடித்துக்கொன்ற மகன் கைது


முதியவரை அடித்துக்கொன்ற மகன் கைது
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில், குடிபோதையில் நடந்த தகராறில் முதியவரை அடித்துக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில், குடிபோதையில் நடந்த தகராறில் முதியவரை அடித்துக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

குடிபோதையில் தகராறு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி காமராஜர் நகர் ஊத்துக்காடு ரோடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(வயது 73). இவருடைய மனைவி கமலம்(68). இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்த நிலையில் 3-வது மகனான செந்தில்(40) தனது மனைவியை பிரிந்து, கடந்த 6 மாதங்களாக பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் நடராஜனும், செந்திலும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் சமாதானம் அடைந்த 2 பேரும், தூங்க சென்றனர்.

பிரேத பரிசோதனை

இதையடுத்து நேற்று அதிகாலை 3.30 மணியளவில் நடராஜன் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தபோது, நிலைதடுமாறி கிழே விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறி ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், நடராஜனை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

இதற்கிடையில் நடராஜனின் சாவில் சந்தேகம் இருப்பதாக பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, தலையில் தாக்கப்பட்டதால், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

கைது

இதையடுத்து செந்திலை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், குடிபோதையில் உருட்டு கட்டையால் தாக்கியதில் நடராஜன் உயிரிழந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். குடிபோதையில் தந்தையை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story