மூதாட்டியை அரிவாளால் வெட்ட வந்த மகன் கைது
ராமநாதபுரத்தில் மூதாட்டியை அரிவாளால் வெட்ட வந்த மகன் கைது செய்யபட்டார்.
ராமநாதபுரத்தில் மூதாட்டியை அரிவாளால் வெட்ட வந்த மகன் கைது செய்யபட்டார்.
தகராறு
ராமநாதபுரம் காயக்காரி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி தமிழரசி (வயது 62). நாகராஜன் கடந்த 2016-ம் ஆண்டு இறந்து விட்டநிலையில் தமிழரசி தனது 2 மகன்களுக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மூத்த மகன் ராமசுப்பிரமணியனுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவரது மனைவி இறந்து விட்டாராம். 2-வது மகன் ஹரிகரனுக்கும் திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் ஹரிகரன் அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்ததால் மனைவி குழந்தையுடன் விவாகரத்து வாங்கி சென்றுவிட்டாராம். இதனால் தமிழரசி தனது இளைய மகன் ஹரிகரனுடன் வீட்டின் தரை தளத்தில் குடியிருந்து வருவதோடு மாடியில் உள்ள மூத்த மகனின் குழந்தைகளையும் கவனித்து வந்தாராம். இதனை ஹரிகரன் கண்டித்தாராம். மேலும், அண்ணனை வீட்டைவிட்டு வெளியேற சொல்லுமாறு கூறி தகராறு செய்து வந்தாராம்.
அரிவாளால் வெட்ட முயற்சி
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹரிகரன் குடித்துவிட்டு வந்து பிரச்சினை செய்து அண்ணனுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டுள்ளார். இருவரும் காயமடைந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ஹரிகரன் அரிவாளை எடுத்துவந்து தாய் என்றும் பாராமல் தமிழரசியை அவதூறாக பேசியதோடு வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தி தமிழரசியை கொல்ல வந்தாராம். அவர் கத்தி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து விலக்கி விட்டுள்ளனர். தன்னை கொல்ல கொண்டு வந்த அரிவாளுடன் தமிழரசி ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்திற்கு வந்து மகன் ஹரிகரன் மீது புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குபதிவு செய்து ஹரிகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.