முதியவரை கொன்ற மகன் கைது


முதியவரை கொன்ற மகன் கைது
x

நெல்லையில் முதியவரை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லையில் முதியவரை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

முதியவர் கொலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 73). இவருக்கு கடல்கனி என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

கடல்கனி கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல்கனி, தன்னுடைய தந்தையை பஸ்சில் நெல்லைக்கு அழைத்து வந்தார். வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் மேம்பாலம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் 2 பேரும் இறங்கினார்கள். அப்போது மாரிமுத்துவை, கடல்கனி தரதரவென ஒதுக்குபுறமான இடத்திற்கு இழுத்துச்சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே வைத்து அடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடல்கனியை தேடி வந்தனர். அவர் கேரளாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருவதால் அங்கு பதுங்கி இருக்கலாம் என்று அவரை தேடிச் சென்றனர்.

மகன் கைது

நேற்று முன்தினம் இரவு கொட்டாரக்கரையில் வைத்து கடல்கனியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடல்கனி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், என்னுடைய தந்தை சொத்துக்களை விற்கப்போவதாக என்னிடம் கூறினார். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். அதே நேரத்தில் அவர் வயது முதிர்ச்சியால் நோய் வாய்ப்பட்டார். அவரை ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச்சென்று வெறுப்படைந்து விட்டேன்.

சிறையில் அடைப்பு

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க பஸ்சில் அழைத்து வந்த போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், எனது தந்தை மாரிமுத்துவை கழுத்தை நெரித்தும், கல்லை தூக்கிப் போட்டும் கொலை செய்து விட்டேன்.

மேற்கண்டவாறு கடல்கனி வாக்குமூலத்தில் கூறியதாகபோலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story