தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது
தா.பழூர் அருகே தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் என்கிற தெய்வசிகாமணி (வயது 55). இவர் இரும்புக்கடை ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகன் பூமிநாதனுக்கும் (32) சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த இலக்கியா என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
உடல்நிலை பாதிப்பு
பூமிநாதன் கூலித்தொழிலாளியாக வேலை செய்தாலும் அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தெய்வசிகாமணியின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னையில் வசித்து வரும் தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமிநாதன் மதுகுடித்துவிட்டு தனது மனைவி இலக்கியாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் சோழமாதேவி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
தகராறு
தெய்வசிகாமணி தனது மனைவியின் மருத்துவ செலவிற்காக தனது வீட்டின் பின்புறம் இருந்த தேக்கு மரத்தை வெட்டி விற்பனை செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தெய்வசிகாமணிக்கும், அவரது மகன் பூமிநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தெய்வசிகாமணி தனது மகன் பூமிநாதனிடம் உனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வந்து குடும்பம் நடத்தினால் மட்டுமே உனக்கு வீட்டை கொடுக்க முடியும் என்று கூறி வேலைக்கு சென்றுவிட்டார்.
மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ேபாது பூமிநாதன் வீட்டில் மதுகுடித்துவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது உனது மனைவியை இன்னும் அழைத்து வரவில்லையா? என்று தெய்வசிகாமணி கேட்டுள்ளார்.
கத்திக்குத்து
இதில் ஆத்திரம் அடைந்த பூமிநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தெய்வசிகாமணியை நெஞ்சில் குத்த முயற்சி செய்துள்ளார். சமயோசிதமாக தெய்வசிகாமணி நகர்ந்து கொண்டதால் கத்திக்குத்து அவரது இடுப்பு பகுதியில் விழுந்துள்ளது. அப்போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தவுடன் பூமிநாதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த தெய்வசிகாமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து தந்தையை கத்தியால் குத்திய பூமிநாதனை கைது செய்தார். பின்னர் அவர் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.