தாயை காரை ஏற்றி கொன்ற வழக்கில் மகன் கைது

தாயை காரை ஏற்றி கொன்ற வழக்கில் மகன் கைது செய்யப்பட்டார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் மனைவி முருகம்மாள் (வயது 65). இவர்களது மகன்கள் சங்கர் என்ற மோகன் (45), ராம்குமார், உதயமூர்த்தி (38).
சங்கரநாராயணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலத்தூர் விலக்கு பகுதியில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராவதற்காக கடந்த 3-ந் தேதி முருகம்மாள், தனது இளைய மகன் உதயமூர்த்தியுடன் மோட்டார் சைக்கிளில் தென்காசிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர்களின் பின்னால் காரில் சங்கர் வந்தார். அவர் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது தனது காரை ஏற்றினார். இந்த சம்பவத்தில் முருகம்மாள் பலியானார். உதயமூர்த்தி படுகாயம் அடைந்தார்.
இந்த கொலை தொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வந்தனர். மேலும் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இலத்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் போது, சங்கரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.






