தொழிலாளியை அடித்துக்கொன்ற மகன், மைத்துனர் கைது
குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட தொழிலாளியை அடித்துக்கொன்ற மகன், மைத்துனர் கைது செய்யப்பட்டனர்.
ஆனைமலை
குடிபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட தொழிலாளியை அடித்துக்கொன்ற மகன், மைத்துனர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வாடிவடரங்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயகாந்த்(வயது 40). இவருடைய மனைவி பாக்கியலட்சுமி(36). இவர்கள் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஜல்லிபட்டியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கியிருந்து, தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்த தம்பதிக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அதில் மூத்த மகள் விஜயசாந்தி(19) தனது கணவர் சபரி என்பவருடன் அருகில் உள்ள மற்ெறாரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
குடிபோதையில் தகராறு
இதற்கிடையில் பாக்கியலட்சுமியின் தம்பியான கடலூர் மாவட்டம் நல்லூர்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்(33) என்பவரும், விஜயகாந்த் வேலை செய்யும் செங்கல் சூளைக்கு தொழிலாளியாக வேலை செய்ய வந்திருந்தார்.
இந்த நிலையில் விஜயகாந்த் குடிபோதையில் அடிக்கடி விஜயசாந்தி வேலை பார்க்கும் செங்கல் சூளைக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மீண்டும் குடிபோதையில் விஜயசாந்தியை பார்க்க விஜயகாந்த் செல்ல முயன்றார். இதை பாக்கியலட்சுமி தடுத்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
மகன், மைத்துனர் கைது
உடனே அவர்களை இளைய மகனான 16 வயது சிறுவன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் தடுக்க முயன்றனர். அதில் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் தேங்காய் மட்டையால் அவர்களை தாக்கினார். இதனால் அவரது மகன் மற்றும் விஜயகுமார் செங்கல், கட்டை ஆகியவற்றால் விஜயகாந்தை சரமாரியாக பதிலுக்கு தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆழியாறு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விஜயகாந்தின் மகனான 16 வயது சிறுவன் மற்றும் மைத்துனர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.