தாய் இறந்த துக்கத்தில் மகன் சாவு


தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் இறந்தார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் இறந்தார்.

மூதாட்டி சாவு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அயன் வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 101). இவர்களுக்கு அர்ஜூனன் (68), பச்சை பெருமாள் (54) ஆகிய 2 மகன்களும், 4 மகள்களும் உண்டு.

பெருமாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே கிருஷ்ணம்மாள் மூத்த மகன் அர்ஜூனனின் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் முதுமையின் காரணமாக கிருஷ்ணம்மாள் நேற்று முன்தினம் இரவில் இறந்தார்.

துக்கத்தில் மகனும் சாவு

தாய் இறந்த துக்கத்தில் அர்ஜூனன் கதறி அழுதவாறு இருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். எனினும் துக்கம் தாளாத அர்ஜூனன் நேற்று மதியம் திடீரென்று இறந்தார்.

இதனைப் பார்த்த குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து கிருஷ்ணம்மாள், அர்ஜூனன் ஆகியோரது உடல்கள் நேற்று மாலையில் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.


Next Story