மதுகுடித்துவிட்டு தாயை துன்புறுத்தியதால் தந்தையை வெட்டிக் கொன்ற மகன்- டாஸ்மாக் கடை முன் வெறிச்செயல்
பொள்ளாச்சி அருகே மதுகுடித்துவிட்டு தாயை துன்புறுத்தியதால் டாஸ்மாக் கடை முன் தந்தையை மகன் வெட்டிக் கொலை செய்தார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே மதுகுடித்துவிட்டு தாயை துன்புறுத்தியதால் டாஸ்மாக் கடை முன் தந்தையை மகன் வெட்டிக் கொலை செய்தார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கரப்பாடியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 48). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா தேவி இவர்களது மகன் கார்த்திக் (24). இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் சிவலிங்கத்திற்கு குடிப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் மனைவி சித்ராதேவி இடம் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மகன் கார்த்திக் கண்டித்து உள்ளார். ஆனால் சிவலிங்கம் தினமும் மதுகுடித்துவிட்டு மனைவியை துன்புறுத்தியதாக தெரிகிறது. அதனால் கார்த்திக் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
வெட்டிக்கொலை
இதற்கிடையில் நேற்று மாலை பூசாரிபட்டியில் உள்ள மதுக்கடைக்கு அருகில் உள்ள மது பாரில் சிவலிங்கம் மது அருந்த சென்று உள்ளார். பின்னர் அங்கு மது அருந்திவிட்டு வெளியே வரும் போது அங்கு வந்த கார்த்திக் மற்றும் அவருடைய தந்்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் இருந்த கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவலிங்கத்தை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து கார்த்திக்கு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். பின்னர் சிவலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கார்த்திக்கை வலைவீசி தேடி வருகின்றனர் குடிபோதையில் தகராறு செய்து வந்த தந்தையை மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.