பெரம்பலூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் விபத்தில் பலி


பெரம்பலூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் விபத்தில் பலி
x

பெரம்பலூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் விபத்தில் பலியானார்.

பெரம்பலூர்

கல்லூரி மாணவர்

பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு ரெங்கா நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது 2-வது மகன் பிரவீன்ராஜ் (வயது 21). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி என்ஜினீயரிங் படித்து வந்தார். விடுமுறை நாளான நேற்று மாலை வீட்டில் இருந்த பிரவீன்ராஜ் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

அப்போது ஆவின் பால் பண்ணை அருகே சென்ற போது, எதிரே வந்த பதிவெண் இல்லாத தண்ணீர் டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரவீன்ராஜ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

டிரைவருக்கு வலைவீச்சு

அப்போது அருகே ரோந்து பணியில் இருந்த பிரவீன்ராஜின் தந்தையும், சப்-இன்ஸ்பெக்டருமான சண்முகம் ஏதோ விபத்து நடந்தது என்று கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அப்போது தனது மகன் விபத்துக்குள்ளாயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் தனது மகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் அங்கு பிரவீன்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மகனின் உடலை பார்த்து சண்முகம் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தந்தை கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story