65 வயது தாயுடன் ஸ்கூட்டரில் மகன் ஆன்மிக பயணம்


65 வயது தாயுடன் ஸ்கூட்டரில் மகன் ஆன்மிக பயணம்
x
தினத்தந்தி 31 Dec 2022 6:45 PM GMT (Updated: 31 Dec 2022 6:45 PM GMT)

ஆசையை நிறைவேற்றுவதற்காக 65 வயது தாயுடன் ஸ்கூட்டரில் மகன் ஆன்மிக பயணம் 62 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து திருக்கோவிலூர் வந்தார்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள போகவதி பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் கிருஷ்ணகுமார்(வயது 44). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருடைய தாயார் சூடாரத்தினம்மா(65). இந்த நிலையில் ஒரு நாள் சூடாரத்தினம்மா, தனது திருமண வாழ்க்கையில் எனது கணவர் தன்னை எங்குமே அழைத்து சென்றதில்லை. இதனால் வெளி உலகம் என்னவென்றே எனக்குத் தெரியாது, எனவே என்னை ஏதேனும் கோவிலுக்கு அழைத்து செல்வாயா என்று கிருஷ்ணகுமாரிடம் கூறியிருக்கிறார். இதற்கு சம்மதித்த அவர் தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தனது சொந்த ஊரில் இருந்து ஸ்கூட்டரில் சூடாரத்தினம்மாவை அழைத்துக் கொண்டு கோவில் கோவிலாக ஆன்மிக பயணத்தை தொடங்கினார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தது மட்டுமின்றி நேபாளம், பூடான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கும் சென்று இருவரும் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இவ்வாறு 62 ஆயிரத்து 402 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த தாய், மகன் இருவரும் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை வந்தடைந்தனர். அவர்களை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர்கள் உலகளந்த பெருமாளை தரிசனம் செய்தனர்.

இந்த பயணம் குறித்து கிருஷ்ணகுமார் கூறும்போது, நான்கு சுவற்றுக்குள்ளேயே இருந்த எனது தாயை அவரது விருப்பப்படி இந்த உலகத்தை சுற்றிக் காட்டுவதை எனது வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். தினமும் காலையில் 6 மணிக்கு பயணத்தை தொடங்கி மாலை 5 மணிக்கு முடித்துக் கொள்வோம். இரவு ஏதாவது கோவில் மடத்தில் தங்கிவிட்டு மறுநாள் மீண்டும் பயணத்தை தொடருவோம் என்றார்.


Next Story