விரைவில் சரளமாக தமிழில் பேசுவேன் -கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


விரைவில் சரளமாக தமிழில் பேசுவேன் -கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x

தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி, விரைவில் சரளமாக தமிழில் பேசுவேன் என்று கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

அவருக்கு கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஈரோடு போலீஸ் சார்பில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.

தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை

பின்னர் தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தீரன் சின்னமலை முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மணிமண்டபத்துக்குள் சென்ற அவர் அங்கு தீரன் சின்னமலை உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் போது தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பழனி சாதுசுவாமிகள் திருமட மடாதிபதி சாது சண்முக அடிகளார் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாராட்டு சான்றிதழ்

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடந்த தீரன் சின்மலை 217-வது நினைவேந்தல் நிகழ்வில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

தீரன் சின்னமலை வாரிசுதாரர்கள் மற்றும் ஓடாநிலை பகுதி மக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் அவர் பேசினார். தொடக்கத்தில் சில வாக்கியங்களை அவர் தமிழில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் சிறந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்பது பெருமையாக உள்ளது.

தமிழில் பேசுவேன்

தமிழ் மிகவும் பழமையான மொழி. மிகவும் அழகான மொழி. தமிழ் மக்களைப்போன்று நானும் தமிழ் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது. விரைவில் நானும் உங்களைப்போன்று சரளமாக தமிழில் பேசுவேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தமிழில் பேசினார். தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய அவர் இறுதியில் தமிழில் வணக்கம் என்று கூறி முடித்தார்.


Next Story