தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தேர் பவனி


தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தேர் பவனி
x

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. விழாவில் திரளானவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. விழாவில் திரளானவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

பரிசுத்த அதிசய பனிமாதா

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தில் 138-வது ஆண்டு திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரை திருப்பலி, மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.

9-ம் திருநாளான நேற்று முன்தினம் காலையில் மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் திருப்பலி நடந்தது. மாலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

தேர் பவனி

தொடர்ந்து இரவு 12 மணியளவில் தேர் பவனி நடந்தது. பரிசுத்த அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி அன்னையை வழிபட்டனர்.

10-ம் திருவிழாவான நேற்று காலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி, மாலையில் முதல் சனி திருப்பலி நடைபெற்றது.

இன்று, கொடியிறக்கம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் நன்றி திருப்பலி நடக்கிறது. காலை 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை பேராலய தர்மகர்த்தா டாக்டர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி, உதவி பங்குத்தந்தை ஜான் ரோஸ் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இறைமக்கள் செய்து இருந்தனர்.


Next Story