ரூ.24 லட்சம் செலவில் கட்டி ஒரு மாதமே ஆன நிலையில் கோரையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் 4 கிராம மக்கள் அதிர்ச்சி


ரூ.24 லட்சம் செலவில் கட்டி ஒரு மாதமே ஆன நிலையில்    கோரையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்    4 கிராம மக்கள் அதிர்ச்சி
x

கோரையாற்றின் குறுக்கே ரூ.24 லட்சத்தில் தரைப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், நேற்று ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் 4 கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,


திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது மாரங்கியூர், பையூர், கொங்கராயநல்லூர், சேத்தூர் கிராமங்கள் ஆகும். இந்த கிராமங்களுக்கு வடக்கு திசையில் தென்பெண்ணை ஆறும், தென்பகுதியில் கோரையாறும் உள்ளது.

இதில் கோரையாறு தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறு ஆகும். வீரமடை என்ற இடத்தில் இருந்து பிரிந்து வரும் கோரையாறு ஏனாதிமங்கலம் என்ற இடத்தில் மீண்டும் தென்பெண்ணை ஆற்றுடன் சங்கமிக்கிறது.

தரைப்பாலம்

மாரங்கியூர், பையூர், கொங்கராயநல்லூர், சேத்தூர் ஆகிய கிராம மக்கள் நகர பகுதிக்கு வர வேண்டும் என்றால் கோரையாற்றை கடந்து ஏனாதிமங்கலம் வந்து தான் செல்ல முடியும்.

எனவே ஏனாதிமங்கலம் - மாரங்கியூர் இடையே பாலம் கட்டி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறை பொது நிதியின் (2021-2022) கீழ் ரூ.24 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் தற்காலிக தரைப்பாலம் கட்டப்பட்டது.

இதில் குழாய்கள் அமைத்து அதற்கு மேல் மண்கொட்டி பாதை அமைக்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவு பெற்று, ஒரு மாதத்துக்கு முன்பு தரைப்பாலம் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

போக்குவரத்து துண்டிப்பு

இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதில் விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்தானது நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7200 கனஅடி என்ற நிலையில் இருந்தது.

இதனால் கோரையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏனாதிமங்கலம்- மாரங்கியூர் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை தேவை

பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில்,வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்காமல் அடித்து செல்லப்பட்டு இருப்பது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது போக்குவரத்து துண்டிப்பு காரணமாக, பல கிலோ மீட்டர் சுற்றி விழுப்புரம் உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. ஆகையால் மாவட்ட கலெக்டர் உடனடியாக இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 4 கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story