15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத தெற்கு ரெயில்வே லைன் குடியிருப்பு சாலை


15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத தெற்கு ரெயில்வே லைன் குடியிருப்பு சாலை
x
தினத்தந்தி 19 Feb 2023 7:30 PM GMT (Updated: 19 Feb 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி நகராட்சி 12-வது வார்டு பகுதியில் 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத தெற்கு ரெயில்வே லைன் பகுதிக்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

12-வது வார்டு

தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் நகராட்சியின் மைய பகுதியில் 12-வது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் உழவர் தெரு, தெற்கு ரெயில்வே லைன் ரோடு, நடேசன் தெரு, சிவா சாலை, சுப்பராயன் தெரு, காரவீதி, குமார் காலனி ரோடு, விநாயகர் கோயில் தெரு உள்ளிட்ட 16 தெருக்கள் அமைந்துள்ளன.

இந்த வார்டில் 802 ஆண் வாக்காளர்கள், 870 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1,672 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டில் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள்.

தர்மபுரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த வார்டில் 120 தெரு விளக்குகள் அமைந்துள்ளன. 7 குடிநீர் டேங்குகள் அமைந்துள்ளன. இவற்றில் 3 பழுதடைந்து உள்ளன. இந்த வார்டில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் கழிவு நீர் கால்வாய்களும் சிறியவையாக காணப்படுகின்றன. கழிவுநீர் கால்வாய்கள் மிகவும் பழையதாக மாறிவிட்டன. இந்த கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இந்த வார்டில் சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக இந்த வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிய ரேஷன் கடை

உழவர் தெருவை சேர்ந்த வசந்தா:-

12- வது வார்டு பகுதியில் குடிநீர் போதுமான அளவில் கிடைத்த போதும் மற்ற பயன்பாடுகளுக்கான தண்ணீர் பற்றாக்குறை அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு தீர்வு காண உழவர் தெரு மற்றும் தெற்கு ரெயில்வே லைன் ரோடு ஆகியவற்றை இணைக்கும் பகுதியில் போர்வெல் வசதியுடன் குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வார்டில் வசிப்பவர்களுக்கு புரோக்கர் ஆபீஸ், கோல்டன் தெரு, எம்ஜிஆர் நகர், பிடமனேரி, பென்னாகரம் ரோடு ஆகிய 5 இடங்களில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே 500 குடும்ப அட்டைகள் கொண்ட இந்த வார்டில் புதிய ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொசுக்களால் பாதிப்பு

குமார் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வேலு:- 12- வது வார்டில் பெரும்பாலான இடங்களில் கழிவு நீர் கால்வாய்கள் குறுகலாகவும், சிறியவையாகவும் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் சீராக வெளியேறாமல் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உருவாகி பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண இந்த வார்டில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். தேவை உள்ள இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும்.

தனியார் நிறுவன ஊழியர் சரவணன்:-

இந்த வார்டில் தெற்கு ரெயில்வே லைன் கடைசி பகுதி ரெயில் நிலையத்தை ஒட்டி உள்ள சாலை வரை செல்கிறது. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கழிவுநீர் கால்வாய் வசதி, முறையான சாலை வசதி இல்லை. இதனால் கழிவுநீர் மற்றும் மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள தெற்கு ரெயில்வே லைன் சாலையை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள்தெரிவித்தனர்.


Next Story