தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆய்வு
நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆய்வு செய்தார்.
தென் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலைகள் நடந்தது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆய்வு நடத்தினார். அப்போது தொடர் கொலைகளை தடுப்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிலையில் நேற்று காலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் வந்தார். அவர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு உட்கோட்டத்துக்கு உட்பட்ட தனிப்படை போலீசாருடன் ஆய்வு நடத்தினார்.
அப்போது, தொடர் கொலைகள் நடப்பதை தடுக்க வேண்டும். முன்விரோதம் காரணமாக கொடுக்கப்படும் புகார்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து தனிப்படை போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ் (நெல்லை), பேச்சிமுத்து (தூத்துக்குடி) மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.