மேம்பாட்டு பணிகள் குறித்து மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு


மேம்பாட்டு பணிகள் குறித்து மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 29 Jun 2023 8:30 PM GMT (Updated: 29 Jun 2023 8:30 PM GMT)

மேம்பாட்டு பணிகள் குறித்து மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கோயம்புத்தூர்


மேட்டுப்பாளையம்


மேம்பாட்டு பணிகள் குறித்து மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


11 ரெயில் நிலையங்கள் தேர்வு


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.


இந்த நிலையில் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகளுக்காக சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட 11 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி ஆகிய ரெயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ன.


பழமையும், பாரம்பரியமும் மிக்க நீலகிரி மலை ரெயில் நிலையங்களை அதன் பழமை மாறாமல் மேம்பாட்டு பணிகளை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.


ஆய்வு


அவருக்கு சேலம் ரெயில்வே கோட்ட பொது மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, நீலகிரி மலை ரெயில் உதவி இயக்குனர் சுப்பிரமணி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலைய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.


பின்னர் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ரெயில் நிலைய மேலாளர் அலுவலகம், நடைமேடை, பயணிகள் காத்திருக்கும் அறை, பயணச்சீட்டு கொடுக்கும் அலுவலகம், தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள பயணச்சீட்டு கொடுக்கும் அலுவலகம், புதிதாக கட்டப்பட்ட நடைபாதை மேம்பாலம், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தொடர்ந்து ரெயில் நிலையத்தில் மேம்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அவருடன் சீனியர் வணிக மேலாளர் பூபதி ராஜா, சீனியர் டி.எம். இ. பரிமளக்குமார், மற்றும் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேர ஆய்வுக்கு பின்னர் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அங்கிருந்து கார் மூலம் குன்னூருக்கு புறப்பட்டு சென்றார்.



Next Story