தெற்குகாடு தர்மர் கோவில் சாலையை சீரமைக்க வேண்டும்


தெற்குகாடு தர்மர் கோவில் சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:47 PM GMT)

ஜாம்புவானோடை தெற்குகாடு தர்மர் கோவில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

தில்லைவிளாகம்:

ஜாம்புவானோடை தெற்குகாடு தர்மர் கோவில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜல்லிக்கற்கள் பெயர்ந்து...

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை தெற்குகாடு பகுதி அதிக மக்கள் வசிக்கும் பகுதியாகும். இப்பகுதியில் புகழ்பெற்ற திரவுபதி அம்மன் கோவில், பிள்ளையார் கோவில், நாக காளியம்மன் கோவில் போன்ற கோவில்கள் உள்ளன. இப்பகுதியில் தர்மர் கோவில் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி உள்ளது.

இதனால் இந்த சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றம் வாயிலாக பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பி வைத்தும் மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.

சாலை மறியல்

இந்த சாலையை சீரமைப்பதற்கான எந்த முயற்சியும் அரசு தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை என கூறி 2 முறை சாலை மறியல் போராட்டங்களை அறிவித்திருந்தனர். பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சாலையை உடனடியாக சீரமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

அதை தொடர்ந்து சாலையை சீரமைக்கும் பணி நடக்கும் என காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகினர். இதை குண்டும், குழியுமான சாலையால் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

காலம் தாழ்த்தாமல்...

மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக கடலுக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் மேற்கண்ட பகுதியில் உள்ள சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story