வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் குளிரான கால நிலையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வால்பாறை
வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் குளிரான கால நிலையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்மேற்கு பருவமழை
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி விட்ட நிலையில், வால்பாறை பகுதியிலும் இரவு-பகலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இதற்கிடையில் கோடை விடுமுறை முடிந்து நாளை(திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் நேற்று வால்பாறை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மழை பெய்து கொண்டு இருந்தபோதிலும், சுற்றுலா பயணிகள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். குளிரான காலநிலை நிலவியதால், மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் வேகம் அதிகரிக்கவே ஆற்றில் குளித்து கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள் கரைக்கு ஓட்டம் பிடித்தனர். பின்னர் சாலையோர கடைகளில் வைத்திருந்த குடைகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். மேலும் சூடான திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர். அங்கு வியாபாரம் களைகட்டியது.
நீர் வரத்து அதிகரிப்பு
வால்பாறையில் பெய்ய தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 25.40 அடியை எட்டியுள்ளது. அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 27 மி.மீ. மழைபெய்தது. அணைக்கு வினாடிக்கு 139.12 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.