தென்மேற்கு பருவமழை எதிரொலி:கடல்போல் காட்சியளிக்கும் தேவம்பாடி வலசு குளம் -விவசாயிகள் மகிழ்ச்சி


தென்மேற்கு பருவமழை எதிரொலி:கடல்போல் காட்சியளிக்கும் தேவம்பாடி வலசு குளம் -விவசாயிகள் மகிழ்ச்சி
x

தென்மேற்கு பருவமழை காரணமாக தேவம்பாடி வலசு குளம் நிரம்பி கடல்போல் காட்சியளிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தென்மேற்கு பருவமழை காரணமாக தேவம்பாடி வலசு குளம் நிரம்பி கடல்போல் காட்சியளிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பி.ஏ.பி. அணையில் இருந்து தண்ணீர்

பொள்ளாச்சியை அருகே தேவம்பாடி வலசில், சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். குளத்து நீரால் அக்கிராமத்தை சுற்றியுள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும், நிலத்தடி நீரும் உயர்வால் தண்ணீர் தட்டுப்பாடு என்பது பல ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது. இந்தநிலையில், கடந்த 15 ஆண்டுகளாக இந்த குளத்துக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. ஒவ்வொரு ஆண்டும் மழைபெய்தாலும், குறைந்த அளவிலே தண்ணீர் வரத்து இருந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மற்றும் சில ஆண்டுகளாக அவ்வப்போது பருவமழை நன்கு பெய்தாலும், குளத்துக்கு தண்ணீர் வரத்து போதிய அளவு இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதன் காரணமாக இந்த குளத்தையொட்டி கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பாதுகாக்க, தேவம்பாடி வலசு குளத்துக்கு பி.ஏ.பி. அணையில் இருந்து, வாய்க்கால் வழியாக தண்ணீர் கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

குளம் நிரம்பியது

ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து நன்கு பெய்தால் மட்டுமே தேவம்பாடி வலசு குளத்துக்கு தண்ணீர் வரத்து இருக்கும் என்ற நிலை ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து, பகல் மற்றும் இரவு என தொடர்ந்து பெய்த பருவமழை காரணமாக, தேவம்பாடி வலசு குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

இந்த ஆண்டில் கடந்த மே மாதம் பெய்த கோடை மழைக்கு பிறகு, ஜூன் மாத இறுதி முதல் தொடர்ந்து பலவாரமாக அவ்வப்போது பெய்த தென்மேற்கு பருவமழையால் பல்வேறு வாய்க்கால் வழிகளில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளப்பெருக்காக குளத்திற்கு வந்தது. மேலும், காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு வந்ததால், குளத்தில் தண்ணீர் அளவு வெகுவாக உயர்ந்தது.

மறுகால் பாய்கிறது

இதனால், தேவம்பாடி வலசு குளமானது தற்போது முழுமையாக நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பெய்த பருவ மழையால் தேவம்பாடி வலசு குளம் நிரம்பி மறுகால் வழியாக தண்ணீர் வெளியேற தொடங்கியுள்ளது. மறுகால் பாயும் அளவிற்கு குளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால், குளத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story