4 பேர் படுகொலை நிகழ்ந்தது எப்படி?


4 பேர் படுகொலை நிகழ்ந்தது எப்படி?
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்லடம் அருகே மாதப்பூர் ஊராட்சி கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியில் மோகன்ராஜ் (வயது 49) வசித்து வந்தார். இவர் தனது தோட்டத்தின் அருகே உள்ள தனது கட்டிடத்தை பேக்கரிக்கு வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த 3-ந்தேதி மாலை சுமார் 6 மணிக்கு அதே பகுதியில் வசிக்கும் நெல்லை மாவட்டம், வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (27), திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையம் முத்தாலபுரம் பகுதியைச் சேர்ந்த விஷால் என்ற சோனைமுத்தையா (22) ஆகிய 3 பேர் மோட்டார் சைக்கிளில் பேக்கரிக்கு வந்தனர்.

பின்னர் பேக்கரிக்கு பின்புறம் உள்ள மோகன்ராஜூக்கு சொந்தமான தோட்டத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். மோகன்ராஜ், மது அருந்துவதை கண்டித்து அவர்களை திட்டி அங்கிருந்து விரட்டி விட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் அவர்களது வீட்டுக்குசென்று விட்டு மீண்டும் இரவு சுமார் 7:30 மணிக்கு மோகன்ராஜ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெங்கடேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மோகன்ராஜை வெட்டி உள்ளார். இதனை தடுக்க வந்த அவரது தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் வெட்டினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். செந்தில்குமார் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறந்தார். இது தொடர்பாக பல்லடம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மண்டல ஐ.ஜி. பவானி ஈஸ்வரி, டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆகியோரது மேற்பார்வையில் எனது (சாமிநாதன்) தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டு செல்லமுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மற்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story