சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தரவேண்டும்
கோவை தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று சிறு வியாபாரிகள் பொதுநல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று சிறு வியாபாரிகள் பொதுநல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில், கிணத்துக்கிடவு அன்னை சோனியாகாந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் வந்து மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடபுதூர் கிராமம் அன்னை சோனியாகாந்தி நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வீட்டு வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு கட்டணம் ஆகியவற்ைற முறையாக செலுத்தி வருகிறோம். ஆனால் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மயானத்தை தூய்மைப்படுத்த கோரிக்கை
திராவிட தமிழர் கட்சி சார்பாக அதன் நிர்வாகிகள் அளித்த மனுவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு அருகே முனியப்பன் கோவில் வீதி உள்ளது. இந்தபகுதியில் பொது மயானம் ஒன்று உள்ளது. இந்த மயானத்தை சுற்றி வேலிகள் இல்லாத காரணத்தால் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் இந்தபகுதியில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மயானத்தை தூய்மைப்படுத்தி வேலி அமைக்க நடவடிக்கை வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இலவச வீட்டுமனை பட்டா
மேலும் கோவை மாவட்டத்தில் வீடு இல்லாத குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள்
தியாகி குமரன் மார்க்கெட் அனைத்து காய், கனி சிறு வியாபாரிகள் பொதுநலச்சங்கம் சார்பில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
டி.கே.மார்க்கெட் சாலையோர வியாபாரிகளுக்கு கடை ஒதுக்குவது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மூலம் அந்த சாலையை ஆக்கிரமித்து இருந்த கடைகள் அகற்றப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் இரு தரப்பினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடத்தை ஒதுக்குவதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எங்களுக்கு இடம் ஒதுக்கி தரவில்லை. இதில் ஒரு தரப்பினர் மட்டும் மீண்டும் அந்த பகுதியில் ஆக்கிரமித்து கடைகள் போட்டுள்ளனர். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சுங்க வரியும் கொடுப்பதில்லை. இந்த நிலையில் அந்த பகுதியில் நாங்களும் கடை அமைக்க இருந்தோம் அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே எங்களுக்கும் சாலையோர கடைகள் அமைக்க இடம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.