புதிய தலைமை மருத்துவமனை அமையும் இடத்தில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு
வள்ளியூரில் புதிய தலைமை மருத்துவமனை அமையும் இடத் தில் சபாநாயகர் அப்பாவு நேற்று ஆய்வு செய்தார்.
வள்ளியூர்:
வள்ளியூரில் புதிய தலைமை மருத்துவமனை அமையும் இடத் தில் சபாநாயகர் அப்பாவு நேற்று ஆய்வு செய்தார்.
சபாநாயகர் அப்பாவு ஆய்வு
வள்ளியூரில் ரூ.31 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. சபாநாயகர் அப்பாவு தலைமையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் விழா முன்னேற்பாடுகள் குறித்தும், புதிய தலைமை மருத்துவமனை அமையும் இடத்தையும் அப்பாவு நேற்று அரசு அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் வாக்குறுதி
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட நான் எனது தேர்தல் அறிக்கையிலும், பிரசாரத்தின் போதும் வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகமும் அமைக்கப்படும் என உறுதியளித்தேன். இதை செயல்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் எனது தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் வள்ளியூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தோம்.
வள்ளியூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தையும் அமைக்க வேண்டும் எனவும், அதற்காக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நான் வைத்த கோரிக்கையை ஏற்று அவர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து தமிழக அரசு வள்ளியூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைக்கவும் அதற்கான கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கவும் ரூ.31 கோடியை வழங்கியது.
4 மாடி கட்டிடம்
வள்ளியூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.30 கோடியில் அனைத்து வசதிகளுடன் நான்கு மாடி கட்டிடமும், ரூ.1 கோடியில் ஒருங்கிணைந்த பரிசோதனை நிலையமும் அமைக்கப்பட உள்ளது. இது அனைத்து மருத்துவ சிகிச்சை பிரிவுகளுடன் 24 மணி நேரமும் செயல்படும். இங்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட சுமார் 300 பேர் பணிபுரிய இருக்கிறார்கள். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்த நிலையில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட உள்ளது.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.
அப்போது தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் நம்பி, வள்ளியூர் நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் கண்ணன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் லதா, துணை இயக்குனர் ராஜேந்திரன், வள்ளியூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கவிதா வெங்கடேசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி, பொறியாளர் சாமுவேல் வேத ஜெபக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.