சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் -எடப்பாடி பழனிசாமி பேட்டி


சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் -எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனம் குறித்தும், அ.தி.மு.க.வில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்களை நீக்கியது குறித்தும் பலமுறை சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்தோம். அவர் அதற்குண்டான தீர்வை காணாத காரணத்தினால், அது குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு வந்தோம். சுமார் 10 முறை கடிதம் கொடுத்திருக்கிறோம். ஐகோர்ட்டு தீர்ப்பு நகலையும் வழங்கி உள்ளோம்.

பலமுறை கேட்ட பிறகும் பதில் அளிக்கவில்லை. எனவே இது குறித்து சட்டசபையில் நான் பேசினேன். எங்களுக்கு முழுமையாக பேச அனுமதி கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர், துணைத்தலைவர் பொறுப்பும் கொடுக்கிறார்கள். அருகிலேயே அமர வைக்கிறார்கள். ஆனால் நாங்கள் வைத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரிக்கிறார்.

எதிர்க்கட்சித்தலைவர் அருகில்...

மரபை அவர் கடைபிடிக்கவில்லை. அது மட்டுமல்ல அவர் தனக்கு தனிப்பட்ட அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கிறார். நாங்கள் அதில் தலையிடவில்லை. சபாநாயகருக்கு எந்த உறுப்பினரை எங்கு அமர வைக்க வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட உரிமையாக இருந்தாலும், காலம் காலமாக எதிர்க்கட்சி தலைவர் அருகில் தான் துணைத் தலைவரை அமர வைக்க வேண்டும். இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது. அதைத்தான் நாங்கள் வலியுறுத்தினோம். அதையெல்லாம் நிராகரிக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர்களுக்குதான் முன்வரிசை அளிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இல்லாத நேரத்தில், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு சட்டசபைக்கு அவர் வந்து செல்வதற்கு வசதியாக சக்கர நாற்காலியில் அவர் வந்து செல்லும் வழியில் ஒரு வாய்ப்பை ஜெயலலிதா உருவாக்கி தந்தார்.

அவர் அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டு தடை இல்லாமல் செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காக செய்யப்பட்டது. அதை வேண்டும் என்று இவர்கள் தன்னுடைய இஷ்டத்திற்கு மாற்றி பேசுகிறார்கள், வேதனையாக இருக்கிறது. இந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி, எப்படி நடந்து கொண்டிருக்கிறது, மரபை கடைபிடிக்கிறார்களா, சட்டத்தை மதிக்கிறார்களா என்பதை எல்லாம் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சபாநாயகரே பதில் அளிக்கிறார்

அது மட்டுமல்ல, எம்.எல்.ஏ.க்கள் தொகுதி சம்பந்தமாக, முக்கிய பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பும்போது அமைச்சரிடம் இருந்தோ, முதல்-அமைச்சரிடம் இருந்தோ பதில் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கு அவரே (சபாநாயகர்) பதிலளித்து விடுகிறார். அமைச்சர்களுக்கும், முதல்-அமைச்சருக்கும் வேலையில்லாமல் போய்விடுகிறது. அதனால் கேள்வி கேட்டவருக்கு எந்த பிரயோஜனமும் இல்லாமல் போய்விடுகிறது.

சபாநாயகரே குறுக்கிட்டு பதில் சொல்கிறார், அமைச்சர்கள் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் நாங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போகிறது. மக்களின் பிரச்சினைகள் தீர்வு காண முடியாமல் போகிறது. இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சினையில் அவர்களின் நாடகம் மயிலாடுதுறையில் வீடியோவாக வெளி வந்துள்ளது. விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.வுக்கு இல்லை. இது வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது.

நடுநிலையோடு...

நான் வைத்த கோரிக்கையை ஏன் தனி தீர்மானத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. அவர்களின் நடிப்பு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் புரிந்து விட்டது. சட்டசபையில் வேறு மாதிரி நடந்து கொள்கிறார்கள், கடையடைப்பு போராட்டத்தில் வேறு விதமாக நடந்து கொள்கிறார்கள். இதுதான் தி.மு.க.வின் மிகப்பெரிய நடிப்பு.

சபாநாயகர் தனது மரபை கடைப்பிடிப்பார் என்று நம்புகிறோம். ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் நடுநிலையோடு இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மரபை மீறுவதாக மக்களின் பார்வைக்கு படுவார்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story