மாணவரிடம் சாதி ரீதியாக பேசிய குளத்தூர் பள்ளி உதவி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
மாணவரிடம் சாதி ரீதியாக பேசிய குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மாணவரிடம் சாதி ரீதியாக பேசிய குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அரசு பள்ளி
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தல் தொடர்பாக கணினி ஆசிரியை மீனா உதவியுடன், பள்ளி உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் கலைச்செல்வி என்பவர் ஒரு மாணவரிடம் சாதி ரீதியாக செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த ஆடியோவில் உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி அந்த மாணவரிடம் பேசும் போது, உங்கள் ஊரைச் சேர்ந்த மாணவர்களை இந்த பள்ளியில் சேர்க்க வேண்டாம் என கூறுகின்றனர். தற்போது பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு உள்ள சிலர் ஒரு சமூகத்தை சேர்ந்தவரை பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக கொண்டுவர முயற்சி எடுக்கின்றனர். அதனால் உங்கள் ஊரில் உள்ளவர்களை தேர்தலில் கலந்துகொள்ள சொல்ல வேண்டும். ஒரு சமூகத்தின் கையில் அரசு பள்ளி சென்று விடக்கூடாது. அனைத்து தரப்பு மாணவர்களும் இங்கு வந்து பயில வேண்டும், என அந்த ஆசிரியர் கூறுகிறார். மேலும் மாணவரிடம் சாதி ரீதியாகவும் பேசுகிறார்.
பணியிடை நீக்கம்
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தினார். தொடர்ந்து உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, கணினி ஆசிரியை மீனா ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை முன்னிட்டு பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் புவிராஜ், மாவட்ட தலைவர் காசி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரான கலைச்செல்வி என்பவர் தன் பள்ளியில் பயிலும் மாணவனிடம் சாதியை தூண்டும் வகையிலும், பள்ளியில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர் தலைவராக வந்து விடக்கூடாது என்று சாதிய வன்மத்துடன் பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. மாணவர்கள் மத்தியில் தீண்டாமையை விதைக்கும் வகையில் பேசிய குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி. உறுதுணையாக இருந்த கணினி ஆசிரியை மீனா ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.