சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் வட்டம் பூவனூரில் சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்து, சாமுண்டீஸ்வரி அம்மன், இந்த கோவிலில் தான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சித்திரை பெருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நாள்தோறும் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. 9-ம் நாளாக நேற்று முன்தினம் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி புனித நீராடி, மாவிளக்கிட்டும், பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.மாலையில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பெரிய கோவில் தெருவாசிகள் செய்திருந்தனர்.