கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. இதேபோல் காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு சிறப்பாக அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து நந்திபெருமானை பக்தர்கள் தூக்கிக்கொண்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். இதில் திருமழபாடி, கண்டிராதித்தம், இலந்தைக்கூடம், செம்பியக்குடி, குலமாணிக்கம், ஆலம்பாடி மேட்டூர், விளாகம், அரண்மனைக்குறிச்சி, பாளையபாடி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் கீழப்பழுவூர் ஆலந்துறையார் சிவன் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
செந்துறையில் உள்ள பழமை வாய்ந்த சிவதாண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் நந்திபகவானுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் பெரியநாயகி உடனுறை சிவதாண்டேஸ்வரர் பிரகார வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
வி.கைகாட்டி அருகே பனங்கூரில் உள்ள பூங்கோதையம்மன் சமேத காளஹஸ்தி அப்பர் கோவிலில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.