ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க அஞ்சலகங்களில் சிறப்பு ஏற்பாடு
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க அஞ்சலகங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கோட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளாா்.
மயிலாடுதுறை;
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க அஞ்சலகங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கோட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளாா். இது குறித்து மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வங்கி கணக்கு
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம். எனவே தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர் அல்லது கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் மட்டுமின்றி 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், பி.எம். கிசான் திட்ட பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை. தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம்.
அஞ்சல் நிலையங்கள்
எனவே மயிலாடுதுறை மாவட்டத்தின் பயனாளிகள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி, தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.