ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு


ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 19 Aug 2023 7:15 PM GMT (Updated: 19 Aug 2023 7:15 PM GMT)

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெற ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்து உள்ளதாக தபால் நிலைய கணகாணிப்பாளர் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்
பொள்ளாச்சி


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெற ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்து உள்ளதாக தபால் நிலைய கணகாணிப்பாளர் தெரிவித்தார்.


அரசு வங்கி


இது குறித்து பொள்ளாச்சி தபால் நிலைய கண்காணிப்பாளர் ஜெயசீலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-


இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, தபால்துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும். இது, அணுகுவதற்கு எளிதான, குறைந்த கட்டணங்களுடன், பொதுமக்களுக்கு எளிய வங்கி சேவை அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வருகிறது.


தற்போது, தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்பு டன் கூடிய வங்கி கணக்கு அவசியம். எனவே தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி வங்கி கணக்கு தொடங்கலாம்.


இருப்புத்தொகை கிடையாது


தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், வாடிக்கையாளர்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி (விரல் ரேகை மூலம்) ஒரு சில நிமிடங்களில் வங்கி கணக்கு தொடங்க முடியும்.


இந்த கணக்கிற்கு இருப்புத்தொகை எதுவும் கிடையாது. தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத்தொகை யை, தபால் நிலையங்களிலும், டோர்ஸ்டெப் பேங்கிங் என்ற சிறப்பு சேவையின் வாயிலாகவும், தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.


பயன் பெறலாம்


100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை, பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம்.


எனவே,கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்கி பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Next Story