தாமிரபரணி ஆற்றில் பலி தர்ப்பணம் செய்ய சிறப்பு ஏற்பாடு
ஆடி அமாவாசையான நாளை (திங்கட்கிழமை) குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பலி தர்ப்பணம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழித்துறை,
ஆடி அமாவாசையான நாளை (திங்கட்கிழமை) குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பலி தர்ப்பணம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை அன்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களின் நினைவாக பலி தர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதம் பல ஆண்டுகளுக்கு பிறகு 2 அமாவாசையாக வருகிறது. அதாவது நாளை (திங்கட்கிழமை) அமாவாசையுடன் ஆடி மாதம் பிறக்கிறது. இதே போல் ஆடி 31-ந் தேதி மற்றொரு அமாவாசையும் வருகிறது.
இதனால் கேரள பஞ்சாங்கத்தின்படி முதல் அமாவாசை நாளில் பலி தர்ப்பணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் கேரள அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது. எனவே கேரள எல்லையோரத்தை சேர்ந்த பெரும்பான்மையான கேரள மக்கள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பலி தர்ப்பணம் செய்வது வழக்கம். இதேபோல் குமரி மக்களும் அன்றைய தினம் பலி தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் வருவார்கள்.
சிறப்பு ஏற்பாடு
இதனையொட்டி குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மகாதேவர் கோவில் அருகில் கோவில் சார்பில் பிரமாண்டமான கொட்டகை அமைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.
நாளை அதிகாலை 4½ மணி முதல் பலி தர்ப்பணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த பகுதி முழுவதும் நன்கு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.