அமராவதி ஆற்றங்கரையில் பக்தர்கள் குளிக்க சிறப்பு ஏற்பாடு


அமராவதி ஆற்றங்கரையில் பக்தர்கள் குளிக்க சிறப்பு ஏற்பாடு
x

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அமராவதி ஆற்றங்கரையில் பக்தர்கள் குளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

மாரியம்மன் கோவில்

கரூர் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ந்தேதி கம்பம் நடும் நிகழ்வுடன் தொடங்கியது. இதையடுத்து, வருகிற 19-ந் தேதி பூத்தட்டு ஊர்வலமும், 28, 29, 30 ஆகிய தேதிகளில் மாவிளக்கு, பால்குடம், அக்னி சட்டி மற்றும் அலகு குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். 31-ந் தேதி கம்பம் ஆற்றுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும்.

இந்தநிலையில், பக்தர்கள் பசுபதி பாளையத்தில் அமைந்துள்ள அமராவதி ஆற்றங்கரையில் புனித நீராடி அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

பக்தர்கள் குளிக்க வசதி

இவ்வாறு அதிகாலை முதல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கம்பத்திற்கு நீரூற்றி வழிபட்டு வரும் நிலையில் தற்போது அமராவதி ஆற்றங்கரையில் நீரின்றி வறண்டு காணப்படுவதால் பக்தர்கள் ஆற்றில் குளித்து நீராட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆற்றங்கரையில் குழாய் அமைத்து பக்தர்கள் குளிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடி அம்மனுக்கு தீர்த்தம் எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டு வருகின்றனர்.


Next Story