தூய்மை பணியாளர்களின் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்
தூய்மை பணியாளர்களின் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.
ஆய்வுகூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. தேசிய தூய்மைப் பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசுகையில், ''தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கான பிரச்சினைகளை தெரிவித்தால் 2 வாரங்களுக்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த பின்னர் அதற்கான அறிக்கையை சமர்பிக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணியில் ஏற்படும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து, அவ்வப்போது ஆய்வு செய்து உடனடியாக தீர்வு காண வேண்டும்'' என்றார்.
2 வாரங்களுக்கு முன்பு சிப்காட் தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியினை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த செந்தமிழ் செல்வன் குடும்பத்துக்கு இழப்பீடு தொகையாக ரூ.15 லட்சத்திற்கான காசோலையினை, அவரது மனைவியிடம் வழங்கினார். முன்னதாக தூய்மை பணியாளர் உயிரிழந்தது குறித்து விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையை பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தனிக்கவனம்
இதுபோன்று தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடராமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட துறைசார்ந்த அலுவலர்கள் அவ்வப்போது தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.தமிழ்நாடு அரசு தற்போது தூய்மைப் பணியாளர் நலவாரியம் அமைத்துள்ளது. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறையை மாற்றி எந்திரங்கள் மூலம் அகற்றும் முறையினை செயல்படுத்திட உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் நலனில் தனிகவனம் செலுத்திட வேண்டும். முறையான அனுமதி இல்லாமல் தொழிற்சாலைகளில் கழிவு நீர் தொட்டிகளை சுத்திகரிக்கும் நடவடிக்கைகள் தொடராமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.