தண்ணீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு சிறப்பு முகாம்


தண்ணீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு சிறப்பு முகாம்
x

மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தண்ணீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின்கீழ் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

விழிப்புணர்வு சிறப்பு முகாம்

நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வருகிற அக்டோபர் 2-ந் தேதி வரை நடத்த வேண்டும்.

பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்களை கொண்டும், நேரு யுவகேந்திரா சங்கத்தினரை ஈடுபடுத்தி பள்ளி கல்லூரிகளிலும், சுய உதவி குழு உறுப்பினர்களை கொண்டு ஊரக பகுதிகளிலும் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம்களையும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து, அதற்கு மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம்களையும் நடத்திட வேண்டும்.

மரக்கன்று நடுதல்

பசுமை மற்றும் சுத்தமான கிராமம், ஊட்டச்சத்து பண்ணைகள் அமைத்தல், பொது திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்களில் பசுமை போர்வை உருவாக்குதல், மரக்கன்று நடுதல் சிறப்பு முகாம்கள், கிராமசபை கூட்டங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவோருக்கு அபராதம் விதித்தல், குப்பைகளற்ற மற்றும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற இடங்களாக உருவாக்க வேண்டும்.

வீடுகள் தோறும் திடக்கழிவு மேலாண்மை முறையை பின்பற்ற செய்ய வேண்டும். திட மற்றும் திரவ கழிவு மேலாண்மைக்கான கட்டமைப்பு வசதிகளை செயல்பாட்டில் வைத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அனைத்து கிராம பகுதிகளிலும் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story