சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்


சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சபரிமலைக்கு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை,

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு, மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் இன்று (வியாழக்கிழமை) முறையாக மாலை அணிவித்து விரதத்தை தொடங்குகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டும் 17-ந் தேதி (இன்று) முதல் 20.1.2023 வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய நகரங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் பம்பைக்கு அதிநவீன சொகுசு பஸ்கள் சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு கூடுதல் பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in என்ற இணையதளம் மூலமும் TNSTC எனப்படும் செயலி மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 94450-14452, 94450-17793 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story