தீபாவளி பண்டிகையை முன்னிட்டு , திருச்சியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் சென்னை, திருச்சியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக மேலாண் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பஸ்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றியும், இடையூறு இன்றியும் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, காரைக்கால் அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் (எம்.இ.பி.இசெட்.) அறிஞர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்தும், கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பஸ்கள் கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளது.
திருச்சியில் இருந்து
அதுபோல், திருச்சியிலிருந்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர, முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகரபஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப கூடுதலாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 3 நாட்களும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ். ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.