மாதானம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
மாதானம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதானம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமல்லாமல், அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டு ஆடிமாத கடைசிவெள்ளியான வருகிற 12-ந்தேதி இந்த கோவிலில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பழையாறு ஆகிய பகுதிகளில் இருந்து மாதானம் கிராமத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.