படைவீடு, ஆலாம்பாளையம் பேரூராட்சிகளில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
நாமக்கல் மாவட்டம் படைவீடு, ஆலாம்பாளையம் பேரூராட்சிகளில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் அமைச்சர் மதிவேந்தன் மனுக்களை பெற்றார்.
பள்ளிபாளையம்
குறைதீர்க்கும் முகாம்
நாமக்கல் மாவட்டம் படைவீடு, ஆலாம்பாளையம் பேரூராட்சிகளில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது அவர் பொதுமக்களிடமிருந்து முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், தையல் எந்திரம் கோருதல், குடிநீர் வசதி, சிமெண்டு சாலை அமைத்தல், தொழிற்கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கோரிக்கை மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மனுக்கள் மீது தீர்வு காணும் வரை அது முழுமையாக கண்காணிக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் அவர் தெரிவித்தார்.
100 நாட்களில் தீர்வு
பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்துடன் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காண சிறப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டார். இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது 100 நாட்களில் தீர்வு காணப்பட்டது.
மேலும் பொதுமக்களின் குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை நேரடியாக மக்களிடமே சென்று பெற்றுக்கொள்ளும் வகையில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைவாரியாக வழங்கப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து அன்றாடம் பொதுமக்களிடம் சென்று கேட்டறிந்து அதற்கு தீர்வுகான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
உடனடி நடவடிக்கை
இதையடுத்து படைவீடு பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில், குடிநீர் வசதி வேண்டி மனு வழங்கிய மனுதாரரின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று பேரூராட்சி செயல் அலுவலருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து வால்ராசம்பாளையம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டி வரப்பெற்ற கோரிக்கை மனு குறித்து அமைச்சர் மதிவேந்தன் நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து சாலையில் இரண்டு பக்கமும் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதில் திருச்செங்கோடு வருவாய் உதவி கலெக்டர் கவுசல்யா, குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி, படைவீடு பேரூராட்சி தலைவர் ராதாமணி, துணைத்தலைவர் பிருந்தா தேவி, செயல் அலுவலர் விஜயசங்கர், ஆலாம்பாளையம் பேரூராட்சி தலைவர் சகுந்தலா, துணை தலைவர் சண்முகபிரியா, செயல் அலுவலர் கிருஷ்ணவேணி உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.