கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்


கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
x

கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின் அரசாணை (நிலை) எண் 52, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ம.அ.தி.1) துறை, நாள் 25.06.2012-ன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பணிகள் வழங்கப்பட்டு வருவது தேசிய அளவில் ஒர் முன்னோடி முயற்சியாகும்.

இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. நாளது வரை 8 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 157 ஊராட்சிகளிலும் 3122 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் 2-வது செவ்வாய்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும் இரு மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்க்கிழமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் முன்னிலையில் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வருகிற மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீல நிற வேலை அட்டையினை பெற்று பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை கரூர் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story