வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 2 Nov 2022 6:45 PM GMT (Updated: 2 Nov 2022 6:45 PM GMT)

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் லலிதா தகவல் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் லலிதா தகவல் தெரிவித்துள்ளார்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்..

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி எதிர்வரும் 09.11.2022 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட 09.11.2022 முதல் 08.12.2022 வரையிலான நாட்களில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.

01.01.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை செய்திட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

படிவங்கள்

இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் முதல் முறை பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6-யும், அயல் நாடு வாழும் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்தலுக்கான படிவம்-6-ஏ-யும், வாக்காளர் பட்டியலில் வேறொரு நபரின் பெயரை சேர்க்க ஆட்சேபித்தலும், தன்னுடைய பெயரை நீக்கக் கோருவதற்கும், இறப்பு அல்லது வசிப்பிடம் மாறிய காரணத்தினால் வேறொரு நபரின் பெயரை நீக்க கோருவதற்கான படிவம்-7-யும், வாக்காளர் பட்டியலிலுள்ள பதிவுகளில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு குடியிருப்பை மாற்றுதல், வாக்காளர் பட்டியலிலுள்ள பதிவுகளை திருத்தம் செய்தல், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறித்தல் ஆகியவற்றிற்கு படிவம்-8 யையும் மேலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்களை இணைப்பதற்கு படிவம் -6 பி-யை வழங்கலாம்.

சிறப்பு முகாம்

பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வசதியாக நவம்பர் 12, 13, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்) சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது. மற்ற நாட்களில் தாசில்தார் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.இதனைத்தொடர்ந்து 05.01.2023 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே இந்த வாய்ப்பினை மயிலாடுதுறை மாவட்ட வாக்காளர்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story