மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்


மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 18 July 2023 1:30 AM IST (Updated: 18 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்

மகளிர் உரிமைத்தொகை

திண்டுக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம் 2 கட்டமாக நடத்தப்படுகிறது. அதன்படி முதல்கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரையும், 2-வது கட்டமாக ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடைபெறுகிறது. இந்த முகாம் நடைபெறும் நாள், நேரத்தை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரேஷன்கடை மூலம் விண்ணப்பம், டோக்கன் வீட்டுக்கே வந்து வழங்கப்படும். எனவே பொதுமக்கள் விண்ணப்பம் பெறுவதற்கு ரேஷன்கடைக்கு செல்ல தேவையில்லை.

மேலும் குடும்பத்தலைவி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, மின்கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் முகாமுக்கு கொண்டு வரவேண்டும்.

இதேபோல் விண்ணப்பத்துடன் எந்த ஆவணத்தின் நகலையும் இணைக்க தேவையில்லை. வருமானச்சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெற தேவையில்லை. இந்த விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும்.

குடும்ப தலைவி

முகாமில் விண்ணப்பதாரரின் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு, விரல் ரேகை சரிபார்க்கப்படும். அப்போது விரல் ரேகைப் பதிவு சரியாக அமையாவிட்டால் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மூலம் ஒரு முறை கடவுச்சொல் பெறப்படும். எனவே ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை பயன்படுத்தும் செல்போனை முகாமுக்கு கொண்டு வரவேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற குடும்ப தலைவிக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

ஒரு ரேஷன்கார்டுக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ரேஷன்கார்டில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஒரே குடும்பமாக கருதப்படுவார்கள். ரேஷன்கார்டில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத்தலைவி ஆவார். அதேநேரம் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டு இருந்தால், அவருடைய மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார். குடும்ப தலைவருடைய மனைவியின் பெயர் ரேஷன்கார்டில் இல்லாவிட்டால் இதர பெண்களில் ஒருவர் குடும்ப தலைவியாக கருதப்படுவார்.

தகவல் பலகை

திருமணமாகாத தனித்த பெண்கள். கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்படுவார்கள். இந்த முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு, நாட்கள் தொடர்பாக ரேஷன்கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும். எனவே ஒவ்வொரு குடும்ப தலைவியும் குறிப்பிட்ட நாளில் முகாமுக்கு சென்று விண்ணப்பிக்கலாம், என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.


Next Story