மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
பொள்ளாச்சி, அங்கலகுறிச்சியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி, அங்கலகுறிச்சியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
சிறப்பு முகாம்
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும் என்கிற குறுஞ்செய்தி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு வந்தது. இந்தநிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்வாரிய அலுவலகங்களில் வருகிற 31-ந் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பொள்ளாச்சி, அங்கலகுறிச்சியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் ஆதார் அட்டையின் நகலை கொண்டு வந்து மின் இணைப்புடன் எண்ணை இணைத்துக் கொண்டனர். இதற்கிடையில் எந்த பகுதியில் ஆதார் எண் இணைக்கப்படுகிறது என்பது குறித்து தெரியாததால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது,
அலைக்கழிப்பு
மின்வாரிய அலுவலகங்களில் உள்ள எந்த இடத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது என்பது குறித்த தகவல் பொதுமக்களுக்கு தெரியவில்லை. இதனால் மின் கட்டணம் செலுத்தும் இடத்தில் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் அதிகாரிகள் இங்கு ஆதார் எண் இணைக்கவில்லை, சம்பந்தபட்ட பிரிவு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.
எந்த பிரிவு அலுவலகம் எங்கு செயல்படுகிறது என்பது குறித்த அறிவிப்பும் இல்லை. இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டனர். எனவே, எந்த பகுதிக்கு எங்கு முகாம் நடக்கிறது என்பது குறித்த அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும் என்றனர்.
6,969 பேர் ஆதார் எண் இணைப்பு
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, மின் கட்டணம் செலுத்தும் இடத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் முதலில் இணைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டதால் இணையதள கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்தந்த பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொள்ளாச்சி கோட்டத் தில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 421 மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டி உள்ளது. இதில் இதுவரை 6,969 மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது. இன்று (நேற்று) ஒரே நாளில் 2,998 பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் என்றனர்