வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.
வேலூர் மாவட்ட கலெக்டர் ராமமூர்த்தி (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிறப்பு முகாம்
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் அலுவலர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று படிவம் 6 பி-ல் வாக்காளர்களின் ஆதார் எண்ணை பெற்று இணையவழியில் GARUDA என்ற மொபைல் ஆப் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இப்பணியினை விரைந்து முடித்திடும் பொருட்டு நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. அன்றைய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.
ஆன்லைன் பதிவு
எனவே இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இதுவரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்காத வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6 பி, பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கொடுத்து, தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் வாக்காளர்கள் தாங்களாகவே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை இணைக்க Elector facing Portal/ Apps like NVSP, VHA ஆகியவற்றில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.