அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெற சிறப்பு முகாம்கள்:இன்று தொடங்குகிறது


அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெற சிறப்பு முகாம்கள்:இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்குகிறது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் உத்தமபாளையம் அருகே அப்பிப்பட்டி, போடி பரமசிவன் கோவில் தெரு ஆகிய இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் உள்ளன. இத்திட்டத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளில், சின்னமனூர், உத்தமபாளையம், போடி சுற்றுவட்டார பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட புறம்போக்கு பகுதிகளில் குடியிருப்பு வரும் ஆக்கிரமிப்பாளர்களை மறுகுடியமர்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், நகர்ப்புற வீடற்ற ஏழைகளுக்கும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வீடுகளை அரசு மானியத்துடன் பயனாளிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்க இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 17-ந்தேதி வரை 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இந்த முகாம்கள் சின்னமனூர், போடி நகராட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. முகாமில், அடுக்குமாடி குடியிருப்பு தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடோ, வீட்டடி மனையோ இருக்கக்கூடாது. மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பயனாளியின் பங்களிப்பு தொகையை செலுத்துவதற்கான சம்மதக்கடிதம் இணைக்க வேண்டும். அப்பிப்பட்டி குடியிருப்புக்கு ரூ.2 லட்சத்து 11 ஆயிரமும், பரமசிவன் கோவில் தெரு குடியிருப்புக்கு ரூ.2 லட்சத்து 23 ஆயிரமும் பயனாளியின் பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் முன்பணமாக ரூ.10 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story