மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை-மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேட்டி


மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை-மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேட்டி
x

பனவடலிசத்திரம் அருகே தனியார் பள்ளிக்கூட பஸ் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியானார்கள். இதையடுத்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா தெரிவித்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

பனவடலிசத்திரம் அருகே தனியார் பள்ளிக்கூட பஸ் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியானார்கள். இதையடுத்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா தெரிவித்தார்.

பள்ளிக்கூட பஸ் மோதி 5 பேர் பலி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 45). இவர் நேற்று முன்தினம் காலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு குடும்பத்துடன் காரில் சென்று விட்டு, மாலையில் அங்கிருந்து காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையே சங்கரன்கோவிலில் இருந்து தனியார் பள்ளிக்கூட பிளஸ்-2 மாணவர்களை ஏற்றி வந்த பஸ், பனவடலிசத்திரம் அருகே மேலநீலிதநல்லூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் சென்றது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஊத்துமலையைச் சேர்ந்த தங்கம் நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பள்ளிக்கூட பஸ்சை டிரைவர் திருப்பியபோது, குருசாமியின் குடும்பத்தினர் வந்த கார் மீது மோதியது.

2 பேர் கைது

இந்த விபத்தில் குருசாமி, அவருடைய மனைவி வேலுத்தாய், மகன் மனோஜ்குமார், குருசாமியின் தாயார் சீதாலட்சுமி, கார் டிரைவர் அய்யனார் ஆகிய 5 பேரும் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த குருசாமி மகள் கற்பகவல்லியை பாளையங்கோட்ைட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பள்ளிக்கூட பஸ்சில் இருந்த 5 மாணவர்கள் லேசான காயமடைந்தனர்.

இதுதொடர்பாக பள்ளிக்கூட பஸ் டிரைவரான சங்கரன்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்த ஆறுமுகசாமி மற்றும் தங்கம் ஆகிய 2 பேர் மீது அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் மெட்ரிக் பள்ளிகள்) ராமசுப்பு ஆகியோர் சங்கரன்கோவில் தனியார் பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா நிருபர்களிடம் கூறுகையில், ''மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், தனியார் பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டது. இங்கு அனுமதியின்றி பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து முழுமையான விசாரணை செய்த பிறகு அதன் அறிக்கை மாவட்ட கலெக்டருக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கும் அனுப்பப்படும். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.


Next Story