அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம்
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கோவை
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவையில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஆடி மாத சிறப்பு பூஜை
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக பக்தர்களால் கருதப்படுகிறது. அதிலும் கடைசி வெள்ளிக்கிழமை விஷேச நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி கோவை பெரியகடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் காலை முதல் கோவிலில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசயைில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோவிலில் அலங்கார பூஜை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.
ரூபாய் நோட்டு அலங்காரம்
ஒக்கலிகர் காலனி அருகே எல்.ஜி. தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ரூ.4 லட்சம் மதிப்பில் 20 ரூபாய், 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ராஜ செட்டியார் வீதியில் உள்ள வன பத்ரகாளியம்மன் மயில் தோகை அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்மனுக்கு வெண்டைக்காய், கத்தரிக்காய், முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி உள்பட பல்வேறு வகையான 4 டன் காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
ரேஸ்கோர்ஸ் சாரதாம்மாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது. ஒலம்பஸ் முத்தி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், காட்டூர் மணி முத்து மாரியம்மன், புலியகுளம் மாரியம்மன், வனபத்ரகாளியம்மன் உள்பட மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பிஸ்கட், சாக்லேட்
மசக்காளிபாளையம் கவையகாளியம்மன் கோவிலில் பிஸ்கட் மற்றும் சாக்லேட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது.
கணபதி சத்திரோடு அண்ணாநகரில் உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அம்மனுக்கு பட்டு ஆடை, மலர் மற்றும் எலுமிச்சை மாலை, ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. ராஜவீதி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் அம்மன் ரேணுகாதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சூலூரில் உள்ள குடலுருவி மாரியம்மன் கோவிலில் கோவக்காய், கத்தரிக்காய், முள்ளங்கி, கேரட், வாழைக்காய் உள்பட 33 வகையான காய்கறிகளால் அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது.
சோமனூர்-இராமாட்சியம்பாளையம் மாகாளியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய அபிஷேகம் நடந்தது. வேப்பிலை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.