அம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை


அம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை
x
தினத்தந்தி 22 July 2023 2:30 AM IST (Updated: 22 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

மாரியம்மன் கோவில்

ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி முதல் வெள்ளியையொட்டி பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதை தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவில் முன்பு உள்ள பீடத்தில் உப்பு கொட்டி பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

காய்கறி அலங்காரம்

பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் அருகே உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.

கடை வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

மேலும் பக்தர்கள் கொண்டு வந்த காய்கறிகளை கொண்டு அம்மனுக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப் போன்று பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கிணத்துக்கடவு

இதேபோல கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின்னர் காலை 7.30 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சூலக்கல் மாரியம்மன் மஞ்சள் அலங்காரத்தில், மாலைகளுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கந்தசாமி செய்திருந்தார்.

சிங்கராம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல கிணத்துக்கடவு கரியகாளியம்மன் கோவில், பிளேக் மாரியம்மன் கோவில், சிவலோகநாதர் சிவலோக நாயகி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மன் கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story